ஜவுளி நகரம்

ஜவுளி நகரத்திற்கான தொலைநோக்குப் பார்வை

தமிழ்நாட்டின் ஜவுளித் தொழிலின் குறிப்பிடத்தக்க வளர்ச்சிக்கான முன்னெடுப்பாக, மாண்புமிகு கைத்தறி மற்றும் ஜவுளித் துறை அமைச்சர் அவர்கள் 2022-23ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட அறிவிப்புகளின் போது, ​​சென்னை அருகே ஜவுளி நகரம் அமைப்பதற்கான சாத்தியக்கூறு ஆய்வு நடத்தப்பட்டு, விரிவான திட்ட அறிக்கை (DPR) தயார் செய்யப்படும் என்று அறிவித்தார்கள். இந்த ஜவுளி நகரமானது முழு ஜவுளி மதிப்பு சங்கிலியையும் உள்ளடக்கி, B2B (வணிகம் முதல் வணிகம்) மற்றும் B2C (வணிகத்திலிருந்து வாடிக்கையாளர் வரை) ஆகிய இரண்டு வழிகளிலும் வாணிபத்தை இணைப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் மாபெரும் வணிக மையமாக ஜவுளி நகரம் விளங்கும். மேலும் ஜவுளி மதிப்புத் தொடரில் முன்பகுதி செயல்பாடுகள் மற்றும் பின் தொடர் செயல்பாடுகளை மேம்படுத்தி (Forward and backward linkages) அவற்றை ஒருங்கிணைத்து ஜவுளித் தொழிலுக்கான உகந்த சூழலை ஏற்படுத்துவதே ஜவுளி நகரத்தின் முதன்மை நோக்கமாகும்

ஜவுளி நகரத்திற்கான முக்கிய அமைவிடம்

திருமழிசையில் உள்ள செயற்கைக்கோள் நகரத்தில் (Satelite City), தேர்வு செய்யப்பட்டுள்ள இடம், ஜவுளி சந்தைப்படுத்தல் மையத்தை உருவாக்குவதற்கு மிகவும் பொருத்தமானது, மேலும், புறநகரில் உள்ள குத்தம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு அருகில் தேசிய நெடுஞ்சாலை எண்.48 (சென்னை-பெங்களுரு சாலை)-யை எளிதில் அணுகும் வகையில் ஜவுளி நகரம் அமைக்க நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மேலும், வெளிவட்டச் சாலை மற்றும் தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களுக்கு எளிதான இணைப்பை உறுதிசெய்கிறது. வரவிருக்கும் இரண்டாம் கட்ட சென்னை மெட்ரோ ரயில் சேவை மற்றும் குத்தம்பாக்கம் பேருந்து நிலையம் அருகில் இருப்பது இந்த ஜவுளி நகரத்தின் அமைவிடத்தினை முக்கியத்துவம் வாய்ந்ததாக்குகிறது.

வளர்ச்சிக்கான இணைப்பை மேம்படுத்துதல்

ஜவுளி நகரம், தேசிய மற்றும் சர்வதேச அளவில் மிகப்பெரிய மற்றும் வசதியான ஜவுளி வர்த்தக மையமாக தமிழ்நாட்டின் நற்பெயரை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளதோடு அதிக அளவில் வேலைவாய்ப்பை உருவாக்கும் ஒரு முக்கிய காரணியாகவும் உள்ளது. இந்த முன்னெடுப்பின் வாயிலாக மாநிலத்தில் சுமார் 20,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

பொருளாதார தாக்கம் மற்றும் வேலை உருவாக்கம்

தமிழ்நாடு ஒளிவுமறைவற்ற ஒப்பந்தப்புள்ளிகள் சட்டம் 1998 மற்றும் விதிகள் 2000 இன் படி, சென்னையில் ஜவுளி நகரம் அமைப்பதற்கான சாத்தியக்கூறு ஆய்வை நடத்துவதற்கும் விரிவான திட்ட அறிக்கையைத் தயாரிப்பதற்கும் ஒரு தொழில்முறை ஆலோசகர் நியமிக்கப்பட்டார். இம்முழுமையான அணுகுமுறையானது, ஜவுளி நகரத் திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்கான வெளிப்படைத்தன்மை மற்றும் முழுமையான திட்டமிடலுக்கான உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. ஜவுளி நகரம் அமைக்கப்படும் போது, ​​தமிழ்நாட்டின் ஜவுளித் தொழில் புத்துணர்வு பெற்று, முழுமையான பொருளாதார வளர்ச்சிக்கு அடிகோலும்.

மாற்றத்தக்க திட்டத்திற்கான வெளிப்படையான அணுகுமுறை

இறுதியாக, சென்னைக்கு அருகில் உள்ள முன்மொழியப்பட்ட ஜவுளி நகரம் மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சரின் தொலைநோக்கு முன்முயற்சியை பிரதிபலிக்கிறது. முக்கிய இருப்பிடம், விரிவான வசதிகள் மற்றும் தொலைநோக்கு பார்வை கொண்ட இந்தத் திட்டம் ஜவுளித் தொழிலில் வர்த்தகத்தை ஊக்குவிப்பது மட்டுமல்லாமல், தமிழ்நாட்டில் புத்தாக்க முயற்சிகளுக்கும் வேலைவாய்ப்பு பெருக்கத்திற்கும் அடிநாதமாக உள்ளது.

-+=